வள்ளற்பெருமான் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமிப் பிள்ளைத் தெருவில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது அதே தெருவில் வாழ்ந்த திருமழிசை முத்துச்சாமி முதலியார் என்பவர் அவருக்கு நண்பனாகவும் சீடனாகவும் பழகி வந்தார். அப்போது இவர் பாடிய சில தோத்திரப் பாடல்களை வள்ளற்பெருமானிடம் காட்டி, சாற்றுக்கவி பெற்றுள்ளார். அந்த சாற்றுக்கவியில் வள்ளலார் இவரை "முத்துச்சாமிக் கவிக்குரிசில்" என்று குறிப்பிடுகிறார்.
சிலகாலம் கழித்து வள்ளலார் வடலூருக்குச் சென்ற பிறகு முத்துசாமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதற்கு வள்ளலார் வரவேண்டும் என்று பெரிதும் விழைகிறார். ஆனால், வள்ளலாரோ திருமணம் முதலிய விழாக்களில் கலந்துகொள்ளும் நிலையில் அப்போது இல்லை. தன்னால் வர இயலவில்லை என்ற செய்தி யினை, 412 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவாக எழுதி, தனது நண்பர் கொந்தமூர் சீனிவாச வரதாச்சாரியார் மூலமாக, நேரில் கொடுக்குமாறு அனுப்புகிறார். இதில் முத்துசா மியை ''மூதறிவாளன் முத்துசாமி" என்று குறிப்பிட்டு, இதனை "இராமலிங்கம் எழுதி விடுத்த மயலுரு சோபான வாசகம்" என்று கூறுகிறார். இப்பாடல் திருஅருட்பா ஆறாம் திருமுறை - ஊரன் அடிகள் பதிப்பில் (பக். 1099 - 1010) காணப்படுகிறது. 'குடும்ப கோரம்' என்ற தலைப்பு யார் கொடுத்தது என்பது தெரியவில்லை
இந்த முத்துசாமி முதலியார் திருஅருட்பா அச்சில் வருவதற் கும் காரணமாக இருந்திருக்கிறார். தொழுவூர் வேலாயுத முதலி யார் எழுதிய, "திருஅருட்பா வரலாறு” என்னும் நூலில் 45வது பாடலில், "ஓங்கருளான் முத்துசாமிப் பெயரின் ஓர் உரவன்" திருவொற்றியூர் சன்னிதி முன்னர் அருட்பாக்களை ஓதி 'பக்தி வித்தினன்' என்று கூறுகிறார்.
இப்படிப் பலவகையிலும் வள்ளலாருடனும், திருஅருட்பாவு டனும் தொடர்பு கொண்டிருந்த, திருமழிசை முத்துசாமி முதலியார் தாம் என்னுடைய தாய்வழி முப்பாட்டனார். அவரைப்பற்றியும், அவர் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த 'இராமலிங்கப் பரதேசி' பற்றி யும் எனது தாயார் கூறக் கேட்டிருக்கிறேன் (பரதேசி என்பது அந்தக் காலத்தில் மிக உயர்ந்த சொல்லாகக் கருதப்பட்டது). எனது தாயார் தேவாரம், திருவாசகம், திருஅருட்பா பாடல்களை இனிமையாக இசையுடன் பாடக்கூடியவர். எனது இளம் பிராயத் தில் எனக்கும் கற்பிக்க முயன்றார். எனது தவக்குறையினால் அந்தத் திறமை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சைவத்தி லும், சன்மார்க்கத்திலும் ஆழ்ந்த பக்தி, உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.